டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்,
டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அரியலூரில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் கல்லூரி சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்ட தி.மு.க.வினர், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தண்டபாணி தலைமையில் கம்யூனிஸ்டு பெண்கள் அமைப்பினர் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் மக்கள் ஒன்று திரண்டு ஜெயங்கொண்டம் -செந்துறை சாலையில் நின்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி புதுக்குடி சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம், கருப்பு பட்டை அணிந்திருந்தனர். விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர், மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பெரம்பலூர்
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களும், திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களும் தங்களது வீட்டின் முன்பு கருப்பு சட்டை, கருப்பு பட்டை அணிந்தும், கருப்பு கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி மதியழகன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் உமாசங்கர் முன்னிலையில் அரியலூர் ரோட்டில் மதுக்கடை முன்பு குன்னம் கிராமத்தை சேர்ந்த சுமார் 300 பேர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமரசம் செய்தனர்.
கருப்பு கொடி கட்டி...
இதேபோல் வேப்பூர் பஸ் நிலையத்தில் மதுக்கடை திறப்பதை கண்டித்து மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.பெரியசாமி தலைமையில் ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சின்ன வெண்மணி கிராமத்தில் தி.மு.க.வினர் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். குன்னம் அருகே உள்ள கொளகாநத்தம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன் தலைமையில் தி.மு.க.வினர் தங்களது வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வயலப்பாடி ஊராட்சி வீரமநல்லூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மங்களமேடு அருகே ஒகளுர் பஸ் நிலையம் முன்பு வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story