ஓட்டப்பிடாரம் அருகே, நோய் கட்டுப்பாட்டு மண்டலம் பகுதியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு


ஓட்டப்பிடாரம் அருகே, நோய் கட்டுப்பாட்டு மண்டலம் பகுதியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
x
தினத்தந்தி 9 May 2020 4:15 AM IST (Updated: 8 May 2020 10:42 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே நோய் கட்டுப்பாட்டு மண்டலம் பகுதியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆதனூர் பகுதியில் ஒரு பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக தனிமைப்படுத்தப்பட்டு, நோய் தடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அந்த பகுதியிலேயே காய்கறிகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்கள், பணியில் ஈடுபடும்போது தினமும் புதிய முக கவசங்களை அணிந்து பணியாற்றுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வருபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவ்வாறு வருகிறவர்களை கண்டறிவதற்கு ஏதுவாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்த 26 பேர் வீடு திரும்பி உள்ளனர். கடந்த 2 தினங்களாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகள் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரவும், வெளியில் இருந்து பொதுமக்கள் இந்த பகுதிகளுக்கு செல்வதும் தடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பகுதிகளில் உள்ள 56 வீடுகளுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டி தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். இதில் 82 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மூலம் அந்த பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகளும் நடந்து வருகிறது.

ஆதனூர் ஊராட்சி தலைவர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர், தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருக்க கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் புதிதாக எந்த ஒரு பணிகளையும் தொடங்க அனுமதி இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளும் இந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலந்துகொண்டவர்கள்

ஆய்வின் போது கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன்பொன்மணி, வளர்மதி, வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, வட்டார மருத்துவ கண்காணிப்பாளர் பிரிட்டன், சுதர்சன், ஆதனூர் பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story