வெளிமாவட்டங்களில் இருந்து வருகை அதிகரிப்பு: கோவில்பட்டி சோதனைச்சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்


வெளிமாவட்டங்களில் இருந்து வருகை அதிகரிப்பு: கோவில்பட்டி சோதனைச்சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
x
தினத்தந்தி 8 May 2020 11:00 PM GMT (Updated: 8 May 2020 6:00 PM GMT)

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், கோவில்பட்டி சோதனைச்சாவடியில் அவை அணிவகுத்து நின்றன. அந்த வாகனங்கள் கிருமி நாசினி தெளித்து அனுப்பி வைக்கப்பட்டன.

கோவில்பட்டி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருகிறவர்களை கண்காணிக்கும் வகையில், மாவட்ட எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வருவாய் துறையினரும், சுகாதார துறையினரும் போலீசாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கு சோதனைச்சாவடியில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர், சுகாதார துறையினர் உள்ளடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அணிவகுத்து நின்ற வாகனங்கள்

இந்த குழுவினர், வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருகிறவர்கள் தகுந்த அனுமதியுடன் வந்துள்ளார்களா? என்று ஆய்வு செய்கின்றனர். மேலும் அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்துகின்றனர். அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்த பின்னரே கோவில்பட்டி வழியாக செல்ல அனுப்பி வைக்கிறார்கள்.

முறையான அனுமதி பெறாமல் வாகனங்களில் வருகிறவர்களை கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி வளாகம், டிரினிட்டி பள்ளி வளாகம் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை நடத்துகின்றனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் அந்த சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவற்றுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதித்தனர்.

கொரோனா பரிசோதனை

மேலும் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களையும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களையும் மேற்கண்ட பள்ளி, கல்லூரி வளாகத்துக்கு அழைத்து சென்று நிறுத்துகின்றனர். அங்கு அந்த வாகனங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரையிலும், அங்கேயே அவர்களை தனிமைப்படுத்துகின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story