டாஸ்மாக் கடை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மீது தாக்குதல்: 10 பேர் கும்பல் வெறிச்செயல்
திருப்பூரில் டாஸ்மாக் கடை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மீது 10 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் டாஸ்மாக் கடை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மீது 10 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் திலகர்நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றும் நல்லசாமி (வயது 39) என்பவரும் மற்றொரு போலீசாரும் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மாலை 5 மணிக்கு கடை மூடும் நேரத்தில் 2 பேர் மது வாங்க சென்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் முககவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸ்காரர் அவர்களிடம், இருவரும் முககவசம் அணியவில்லை என்றும் மாலை, 5 மணி ஆகிவிட்டதால் கடையை மூட இருப்பதால் மது வாங்க முடியாது என்று கூறி உள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர் இருவரையும் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் கடை பூட்டிய உடன் போலீஸ்காரர் நல்லசாமி அங்கு பணியை முடித்து கொண்டு, மோட்டார்சைக்கிளை எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு திடீரென வந்த 10 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரரை தகாத வார்த்தையால் பேசியதுடன், இரும்புக்கம்பி. நாற்காலி, குழாய் ஆகியவற்றால் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு போயம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீஸ்காரரை தாக்கிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. அவர்கள் அனுப்பர்பாளையம் கோகுலம்காலனி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story