திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு: ஒரே நாளில் ரூ.11 கோடிக்கு மது விற்பனை


திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு: ஒரே நாளில் ரூ.11 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 9 May 2020 4:30 AM IST (Updated: 9 May 2020 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல் நாளில் ரூ.11 கோடியே 86 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.

அனுப்பர்பாளையம், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டன. பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 238 கடைகள் உள்ளன. இவற்றில் மாநகரில் 12 கடைகள் உள்பட மொத்தம் 21 கடைகள் திறக்கப்படவில்லை. 217 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டது. டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபிரியர்கள் மது வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதார் கார்டு மற்றும் குடையுடன் வருபவர்களுக்கு டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்யப்பட்டது.

2-வது நாளாக நேற்று காலை முதல் மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்திருந்தனர். கடைகளுக்கு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். முதல் நாளான நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.11 கோடியே 86 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக நாளொன்றுக்கு சராசரியாக ரூ.9 கோடிக்கு மது விற்பனை நடப்பது வழக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் மது விற்பனை அதிகரித்துள்ளது. இது வழக்கமான மது விற்பனை தான். எதிர்பார்த்ததை விட குறைவுதான் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் கோவை மண்டல முதுநிலை மேலாளர் பரமேஸ்வரி திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, தண்ணீர்பந்தல்காலனி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா? சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குடைகளுடன் வருகின்றனரா? என்று ஆய்வு செய்தார்.

Next Story