வருகிற 18-ந்தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத பஸ்கள் இயக்க நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்


வருகிற 18-ந்தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத பஸ்கள் இயக்க நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 9 May 2020 4:00 AM IST (Updated: 9 May 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 50 சதவீத பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட ஈரோடு, கோபி, பவானி, சத்தி, பெருந்துறை, பள்ளிப்பாளையம் உள்ளிட்ட 13 கிளைகளில் இருந்து இயக்கப்பட்டு வந்த 880 அரசு பஸ்கள் அந்தந்த கிளைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த பஸ்கள் அனைத்தும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பஸ்கள் செல்லும் போது பிரேக் டவுன் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும், பேட்டரிகள் பழுது ஏற்படாமல் இருக்கவும் தற்போது ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு கிளை அதிகாரிகள் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோவை, சேலம், திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வந்த 880 அரசு பஸ்கள் அந்தந்த கிளைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு தளர்த்தப்பட்டால் வருகிற 18-ந்தேதி முதல் ஒவ்வொரு கிளையிலும் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக எந்தெந்த வழித்தடங்கள், எத்தனை பஸ்கள், எத்தனை பயணிகள், சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, குறைவான பயணிகளை கொண்டு இயக்கும் போது நஷ்டத்தை ஈடுகட்டுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்து வருகின்றோம்’ என்றார்கள்.

Next Story