கடம்பத்தூர் டாஸ்மாக் கடையில் போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி ஆய்வு - கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி


கடம்பத்தூர் டாஸ்மாக் கடையில் போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி ஆய்வு - கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி
x
தினத்தந்தி 8 May 2020 10:45 PM GMT (Updated: 8 May 2020 9:51 PM GMT)

திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் டாஸ்மாக் கடையில் போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி திடீரென ஆய்வு நடத்தினார். இதற்கிடையே அங்கு மது வாங்க மதுபிரியர்கள் முண்டியடித்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

திருவள்ளூர், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர். திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் காலை 6 மணியில் இருந்தே மதுவாங்க மதுபிரியர்கள் குவிந்தனர். சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்தனர். சுட்டெரிக்கும் வெயிலிலும் மதுபிரியர்கள் குடைபிடித்தபடி காத்திருந்தனர்.

தடியடி

அவர்களிடம் கடம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் அடையாள அட்டையை பெற்று சரிபார்த்த பின்னரே டோக்கன் கொடுத்து அவர்களை வரிசையில் நிற்க வைத்தனர். மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி சம்பவ இடத்திற்கு வந்து திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, அவர் 2 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று, உரிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் உரசியபடி நின்றவர்களை ஒழுங்குப்படுத்தி அறிவுரைகள் வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பின்னர் அவர் திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் கலந்துரையாடினார். 2-வது நாளிலும் கடம்பத்தூர் டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

Next Story