அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல வேண்டும் - கலெக்டர் தகவல்


அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல வேண்டும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 May 2020 4:15 AM IST (Updated: 9 May 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் நகராட்சி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே செல்லவேண்டும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளும் 6 பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே சென்றுவர ஒரு குடும்பத்திற்கு தலா ஒரு வண்ண அட்டை ஏற்கனவே நகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மண்டலங்கள் விலக்கு அளிக்கப்பட்டு காஞ்சீபுரம் நகராட்சி முழுவதும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அடையாள அட்டை

அதன்படி இளஞ்சிவப்பு, பச்சை வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்கள், திங்கள், வியாழக்கிழமைகளிலும், மஞ்சள், ஆரஞ்சு வண்ண அடையாள அட்டை வைத்துள்ளவர்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், நீல வண்ண அட்டை வைத்துள்ளவர்கள், புதன், சனிக்கிழமைகளிலும் வெளியில் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி இல்லை. நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே வெளியில் வரவேண்டும்.

17-ந்தேதி வரை...

அட்டையில் குறிப்பிட்டுள்ள கிழமைகளில் மட்டுமே பொதுமக்கள் தங்கள் வசிக்கும் மண்டல பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.

இந்த நடைமுறை வருகிற 17-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story