நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு: தஞ்சையில், ரவுடி வெட்டிக்கொலை பழிக்குப்பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை


நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு: தஞ்சையில், ரவுடி வெட்டிக்கொலை பழிக்குப்பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 May 2020 4:08 AM IST (Updated: 9 May 2020 4:08 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், நண்பர்களுடன் மது அருந்தியபோது ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர், 

தஞ்சையில், நண்பர்களுடன் மது அருந்தியபோது ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் என்ற அருண் குமார்(வயது 37). தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்று உள்ளது. இவர் மீது தஞ்சையில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் மாலை மது வாங்கி வந்த அருண்குமார், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளார். நள்ளிரவு வரை அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை கொலை செய்தவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

பழிக்குப்பழியாக நடந்ததா?

இந்த நிலையில் நேற்று காலை அருண்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் அருண்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பழிக்குப்பழியாக அருண்குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்து உள்ளது. இது தொடர்பாக அருண்குமாரை கொன்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story