கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி: ‘சோடியம் நைட்ரேட்’ கரைசலை குடித்த தனியார் நிறுவன மேலாளர் சாவு
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்து சோடியம் நைட்ரேட்’ கரைசலை குடித்த தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை,
சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவனேசன்(வயது 47). இவர் கடந்த 27 ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள ஒரு தனியார் ‘பயோடெக்’ நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் சளி மருந்து உள்பட பல்வேறு மருந்துகள் கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் என்று கூறப்படுகிறது.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் ‘சோடியம் நைட்ரேட்’ மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் தயாரித்த கரைசலை சென்னை தியாகராயநகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள அவரது நண்பர் டாக்டர் ராஜ்குமார் வீட்டில் வைத்து குடித்து சோதனை செய்தார்.
சிறிது நேரத்தில் சிவனேசன் மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர், சிவனேசனை மீட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story