ரெயிலில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் - மராட்டிய, மத்திய பிரதேச அரசுகள் அறிவிப்பு


ரெயிலில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் - மராட்டிய, மத்திய பிரதேச அரசுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 May 2020 4:37 AM IST (Updated: 9 May 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என மராட்டிய மற்றும் மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரிகள் அறிவித்து உள்ளனர்.

மும்பை, 

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே நேற்று அதிகாலை சரக்கு ரெயில் ஏறி தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டு இருந்த 16 மத்திய பிரதேச தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்து உள்ள மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பலியான தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்து உள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களின் மருத்துவ செலவையும் மராட்டிய அரசு ஏற்கும் என கூறியுள்ளார்.

இதேபோல ரெயிலில் சிக்கி பலியான மத்திய பிரதேச தொழிலாளர்களின் குடும்பத்துக்கு அந்த மாநில முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.

உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

இதற்கிடையே வெளிமாநில தொழிலாளர்கள் தாங்களாக சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல வேண்டாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மாநில அரசு ரெயில்வேயுடன் பேசி வருகிறது. மும்பையில் இருந்தும் கூட விரைவில் ரெயில்கள் இயக்கப்படும். தொழிலாளர்கள் உயிரை பணயம் வைக்க வேண்டாம். மாவட்ட நிர்வாகங்களால் வெளிமாநில தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு உணவு மற்றும் தேவையான மருந்து வழங்கப்படுகிறது.

ரெயில்கள் இயக்கப்படுவது குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் வரை முகாம்களை விட்டு வெளியே வர வேண்டாம்’’ என கேட்டுக்கொண்டு உள்ளார்.

Next Story