ஊரடங்கால், குறைந்த குப்பைகள் 1,300 டன் குப்பைகள் குறைவு


ஊரடங்கால், குறைந்த குப்பைகள் 1,300 டன் குப்பைகள் குறைவு
x
தினத்தந்தி 9 May 2020 4:48 AM IST (Updated: 9 May 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் திறக்கப்படாததாலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும் தஞ்சை மாநகரில் நேற்று முன்தினம் வரையில் 1,300 டன் குப்பைகள் குறைந்துள்ளன.

தஞ்சாவூர், 

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் திறக்கப்படாததாலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும் தஞ்சை மாநகரில் நேற்று முன்தினம் வரையில் 1,300 டன் குப்பைகள் குறைந்துள்ளன.

51 வார்டுகள்

தஞ்சை மாநகரில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இது தவிர தஞ்சையில் சுற்றுலா தலமான பெரிய கோவில், அரண்மனை, மணிமண்டபம் உள்ளிட்டவைகள் உள்ளன. தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்வர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3-ந் தேதி வரை அத்தியாவசிய கடைகளை தவிர இதர கடைகள் திறக்கப்படவில்லை. அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை, மருந்துக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு அடையாள அனுமதி அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியே வர அனுமதிக்கப்பட்டது

ஊரடங்கில் தளர்வு

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் செய்யப்பட்டன. இருப்பினும் இன்னும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.

தஞ்சை மாநகராட்சி பகுதி 32 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. இந்த பகுதிகளில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தஞ்சை மாநகரில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் போடப்படும் குப்பைகள் என தினமும் 105 முதல் 110 டன் குப்பைகள் சேகரிக்கப்படும்.

இந்த குப்பைகள் தினமும் தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் கொண்டு சேகரிக்கப்பட்டு வருகின்றன.

குப்பைத்தொட்டிகள்

இதற்காக மாநகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை இந்த குப்பை தொட்டிகளில் கொண்டு வந்து கொட்டுவார்கள். அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்காக தஞ்சை மாநகராட்சி பகுதியில் மட்டும் 14 சுகாதார மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் உள்ள தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும் தஞ்சை மாநகரம் ‘ஸ்மார்ட் சிட்டி’யாக(பொலிவுறு நகரம்) அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகரில் 14 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டு அவை உரமாக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

1,300 டன் குறைந்தது

தற்போது ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்கப்படாததாலும், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாலும் குப்பைகள் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது தினமும் 25 முதல் 30 டன் வரை குப்பைகள் குறைந்து வருகின்றன. அதாவது 80 டன் குப்பைகள் தான் தற்போது சேகரிக்கப்படுகின்றன. அதாவது ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று முன்தினம் வரையில் 1,300 டன் வரை குப்பைகள் குறைந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது குறைந்து காணப்படுகிறது. மேலும் உணவகங்கள், கடைகளில் உள்ள கழிவுகள் கொட்டுவதும் குறைந்துள்ளது. இதனால் வழக்கத்தை விட தினமும் 30 டன் வரை குப்பைகள் குறைந்து காணப்படுகின்றன” என்றனர்.

Next Story