ஆறுதேசம் அதிகாரியை தாக்கியவரை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்ட கிராம நிர்வாக அலுவலர்கள்
ஆறுதேசம் கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய ராணுவ வீரரை கைது செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்டனர்.
நாகர்கோவில்,
ஆறுதேசம் கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய ராணுவ வீரரை கைது செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். மேலும், பத்மநாபபுரத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாசில்தாரிடம் மனு
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க அகஸ்தீஸ்வரம் வட்ட தலைவர் செந்தில் கார்த்திகேயன், செயலாளர் சிவசங்கர் மற்றும் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் நின்றனர். பின்னர் அவர்கள் அகஸ்தீஸ்வரம் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிள்ளியூர் தாலுகா ஆறுதேசம் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ். இவர் கடந்த 6-ந் தேதி செண்பகமூடு ஆலன்கோடு பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் அவரை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார்.
கொரோனா பணி செய்வதில்லை
இதில் படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அதிகாரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அந்த ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக்கோரி நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் குமரி மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ஆகியோரை சந்தித்து, ராணுவவீரரை கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியும் அவர் கைது செய்யப்படவில்லை. எனவே அவரை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்க குமரி மாவட்ட கிளையின் தீர்மானத்தின்படி அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 36 கிராம நிர்வாக அதிகாரிகளும் கொரோனா தடுப்பு பணிகள் எதுவும் செய்வதில்லை என முடிவு செய்துள்ளோம். அதே சமயத்தில், கிராம நிர்வாக அதிகாரிகளின் வழக்கமான பணிகளையும், ஜமாபந்தி கணக்குகள் தயார் செய்யும் பணிகளையும் தொடர்ந்து செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பத்மநாபபுரத்தில் போராட்டம்
இதற்கிடையே நேற்று பணியை புறக்கணித்து பத்மநாபபுரத்தில் உள்ள கல்குளம் தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை பணியை புறக்கணிப்போம் என்றனர். மதியம் வரை போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தின் போது, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story