பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் டாஸ்மாக் கடையை காங்கிரசார் முற்றுகையிட முயற்சி குளச்சலில் பரபரப்பு


பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் டாஸ்மாக் கடையை காங்கிரசார் முற்றுகையிட முயற்சி குளச்சலில் பரபரப்பு
x
தினத்தந்தி 9 May 2020 7:33 AM IST (Updated: 9 May 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் டாஸ்மாக் கடையை காங்கிரசார் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளச்சல், 

குளச்சலில் டாஸ்மாக் கடையை காங்கிரசார் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுக்கடைக்கு எதிர்ப்பு

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஊரடங்கில் சிலவற்றை தமிழக அரசு தளர்த்தியது.

அதன்படி நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் (சென்னையை தவிர) மதுக்கடைகள் திறக்கப்பட்டது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தொழிலாளர்கள் தவித்து வரும் சூழ்நிலையில், மதுக்கடைகளை திறந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், தி.மு.க. கூட்டணி கட்சியினர் தங்களுடைய வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் குமரி மாவட்டத்திலும் போராட்டம் நடந்தது.

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு பகுதியில் காங்கிரசார் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஊரடங்கு காலத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்து தடுத்து நிறுத்தினார்.

இதனையடுத்து அண்ணாசிலை சந்திப்பில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் யூசுப்கான், சாமுவேல் சேகர், கே.டி.உதயம், முனாப், தர்மராஜ், சபின், பினுலால்சிங், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story