மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு: குமரியில் ஆயர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம்
மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் ஆயர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் ஆயர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
தமிழகத்தில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல், மார்த்தாண்டம் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், தக்கலை ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாக ஒரு மனு அனுப்பினர்.
இந்த நிலையில் நேற்று கத்தோலிக்க கிறிஸ்தவ அன்பியங்கள் மற்றும் கிறிஸ்தவ இளைஞர்கள் சார்பில் மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை குமரியில் போராட்டம் நடத்தப்பட்டது. அதாவது, அவரவர் வீடுகள் முன்பும், பங்கு தந்தைகள் அந்தந்த பங்கு இல்லங்கள் முன்பும் போராட்டத்தை நடத்தினர். மேலும் குருசடி அமைந்துள்ள பகுதிகளிலும் பங்குதந்தைகள் மற்றும் அன்பிய மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
கோட்டார் ஆயர்
இதே போல் ஆயர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள ஆயர் இல்லம் முன்புறம் உள்ள சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் ஆயர் இல்ல அருட்பணியாளர்கள், அன்பியங்களைச் சேர்ந்த ஆண், பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் மதுவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர். கொட்டும் மழைக்கு இடையே போராட்டம் நடந்ததால் சிலர் குடைகளுடன் பங்கேற்றதையும் காணமுடிந்தது.
ஆயர் நசரேன் சூசை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், மதுக்கடை திறந்திருப்பதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் இணைந்து நிற்க முடியாத நிலை ஏற்படும். எனவே, மதுக்கடையை திறக்கக்கூடாது. எங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பில் நாங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறோம் என்றார்.
ஆயர் ஜெரோம் தாஸ்
குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் நேற்று மாலை மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் உள்ள ஆயர் இல்லம் முன்பு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து அமைதிப்போராட்டம் நடந்தது. இதில் குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம், செயலாளர் ரசல்ராஜ், பொருளாளர் அகஸ்டின், ஆயரின் செயலாளர் மார்ட்டின் மற்றும் அருட்பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கொட்டும் மழையில் குடைகள் பிடித்தபடி கையில் எதிர்ப்பு பதாகைகளை ஏந்திய நிலையில் மவுனமாக போராட்டம் நடத்தினர்.
ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ்
மார்த்தாண்டம் மறைமாவட்டம் சார்பில் வெட்டுமணியில் உள்ள ஆயர் இல்லம் முன்பு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் பதாகைகள் ஏந்தி மவுன போராட்டம் நடந்தது. அதில் மறைமாவட்ட குருகுல முதல்வர் வர்க்கீஸ், பொருளாளர் சதீஷ், செயலாளர் கெபின் உள்பட பலர் கலந்து கொண்டனர். திக்கணங்கோடு அருகே மணலிக்குழிவிளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய முன்பு மாத்திரவிளை மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் மரிய வின்சென்ட் தலைமையில் போராட்டம் நடந்தது.
ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன்
தக்கலை மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் நடந்த போராட்டத்துக்கு ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அருட்பணியாளர்கள் தாமஸ், ஜாண்ஸ்லால், தாமஸ் சத்திய நேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மது கடைகளை மூட வலியுறுத்தியும் கைகளில் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபோல், அனைத்து ஆலயங்கள் முன்பு பங்கு தந்தையர்களும், பங்குமக்கள் தங்கள் வீடுகளிலும் சமூக இடைவெளிகளை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈத்தாமொழி அருகே கேசவன்புத்தன்துறை மீனவ கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் வீடுகளின் முன்பு போராட்டம் நடத்தினர். இதில் மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய நிலையில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story