திருச்சி விமான நிலையத்தில் சிறப்பு விமானம் இயக்க பாதுகாப்பு ஒத்திகை
திருச்சி விமான நிலையத்தில் சிறப்பு விமானம் இயக்க பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் சிறப்பு விமானம் இயக்க பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
பாதுகாப்பு ஒத்திகை
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரிலிருந்து சிறப்பு விமானங்கள் 9 மற்றும் 10-ந் தேதிகளில் இயக்கப்பட இருக்கிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் விமான நிலைய இயக்குனர் குணசேகரன் தலைமையில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், குடியுரிமை பிரிவு அதிகாரிகள், விமான நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருச்சி விமான நிலையத்தில் சிறப்பு விமானம் இயக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது. அப்போது, விமான நிலையத்திலிருந்து பயணிகள் எவ்வாறு விமானம் வரை செல்ல வேண்டும்? விமானத்தில் இருந்து வெளியே வாசல் வரை பயணிகள் எவ்வாறு செல்ல வேண்டும்? என்று செயல் முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பல்வேறு சோதனை
மேலும் பயணிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், முதல் நுழைவு வாயிலில் பயணிகள் நுழைவது முதல் விமானம் வரையும், அதுபோல் விமானத்தில் இருந்து நுழைவு வாயிலில் வெளியேறுவது வரை பயணிகளை பல்வேறு நிலைகளில் தொழில்பாதுகாப்பு படையினர், மருத்துவ குழுவினர், விமான நிலைய அதிகாரிகள், குடியுரிமை பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் எவ்வாறு சோதனை செய்வது என்பது குறித்தும், பயணிகள் எந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்டவை குறித்து செயல்திட்ட முறையில் ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகையில் விமான நிலைய இயக்குனர் குணசேகரன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் சந்தோஷ் குமார், துணை பொது மேலாளர் ஜோஷி பிரான்சிஸ், உதவி பொது மேலாளர் கோபால கிருஷ்ணன், முனைய மேலாளர்கள் ஞானேந்திரா சென், சுரேந்திரா மற்றும் விமான நிலைய மருத்துவ அதிகாரிகள், சுங்கத்துறை மற்றும் குடியுரிமை பிரிவு அதிகாரிகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவன அதிகாரி சபிதா உட் பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story