திருச்சி கேண்டீனை முன்னாள் ராணுவவீரர்கள் முற்றுகை போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் வினியோகம்


திருச்சி கேண்டீனை முன்னாள் ராணுவவீரர்கள் முற்றுகை போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் வினியோகம்
x
தினத்தந்தி 9 May 2020 8:13 AM IST (Updated: 9 May 2020 8:13 AM IST)
t-max-icont-min-icon

வரவழைத்து விட்டு பொருட்கள் இல்லை என்பதா? என ஆவேசம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் கேண்டீனை முற்றுகையிட்டனர்.

திருச்சி, 

வரவழைத்து விட்டு பொருட்கள் இல்லை என்பதா? என ஆவேசம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் கேண்டீனை முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.

ராணுவ கேண்டீன்

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தலைமை மிலிட்டரி கேண்டீன் செயல்பட்டு வருகிறது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு இந்த கேண்டீனில் உணவு பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து கேண்டீனின் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் வந்து ஏமாறாமல் இருக்கும் வகையில், ‘கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பொருட்கள் வழங்குவது மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, யாரும் வரவேண்டாம்’ என கேண்டீன் நிர்வாகம் பதாகையில் எழுதி தொங்க விட்டிருந்தது. மேலும் அவர்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவலும் தெரிவிக்கப்பட்டது.

முற்றுகையிட்டு வாக்குவாதம்

இந்த நிலையில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து செயல்பட தொடங்கின. அதுபோல ராணுவ கேண்டீனில் நேற்று முதல் பொருட்கள் வழங்கப்படுவதாக முன்னாள் ராணுவவீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் நேற்று அதிகாலை முதலே 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர்.

அங்கு கேண்டீன் முன்பு போடப்பட்டிருந்த சமூக விலகல் கட்டத்திற்குள் செருப்பு, ஹெல்மெட், பை உள்ளிட்டவைகளை வைத்து இடம் பிடித்தனர். வெளியில் நின்றபடி, கேண்டீன் நிர்வாகத்திடம் அவ்வப்போது பொருட் களை வாங்குவதற்காக கேட்டு கொண்டிருந்தனர். அப்போது கேண்டீன் பொறுப்பாளர் ஒருவர், ‘உங்களுக்கு பொருட்கள் வழங்கப்படமாட்டாது. தலைமையிடத்தில் இருந்து அறிவிப்பு வந்திருக்கிறது என்று கூறினார்.

இதனால், அவர்கள் ஆவேசம் அடைந்து, அனைவரும் கேண்டீனை முற்றுகையிட்டனர். வீட்டில் இருந்தவர்களை பொருட்களை வாங்க வாருங்கள் என தகவல் தெரிவித்து விட்டு, இப்போது மறுப்பதா? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர், அங்கு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தவும் முயற்சித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொருட்கள் வினியோகம்

தகவல் அறிந்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அதன்பின்னரே கேண்டீன் பொறுப்பாளர்கள் மளிகைசாமான்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்டவைகளை வினியோகிக்க தொடங்கினர். முன்னதாக டோக்கன் வழங்கப்பட்டு, சமூக விலகல் இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டனர். பலர் வெயிலில் நிற்க முடியாமல் சமூக இடைவெளிக்காக போட்ட வட்டத்தில் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து விட்டு நிழலில் சென்று நின்றனர். பின்னர் 5 நபர்களாக கேண்டீன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல வெயில் அதிகமானதால், அனைவரும் தாங்கள் கொண்டுவந்த குடையை பிடித்தபடி வரிசையில் நின்றனர். பெரும்பாலும் வயதானவர்களே அதிகம் வந்ததால் நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாமல் திணறினர்.அப்போது சமூக விலகலும் காணாமல் போனது.

Next Story