ஊரடங்கு காரணமாக ஊட்டி ரோஜா கண்காட்சி ரத்து
ஊரடங்கு காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. கடந்த 1995-ம் ஆண்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 100-வது மலர் கண்காட்சி நடந்தது. அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்காவை தொடங்கி வைத்தார். இந்த பூங்காவில் 4 ஆயிரத்து 202 ரகங்களை சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2006-ம் ஆண்டு விசேஷ ரோஜா மலர்கள் மற்றும் இந்தியாவிலேயே சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதை ஊட்டி ரோஜா பூங்காவுக்கு உலக ரோஜா சம்மேளனம் வழங்கி பெருமை சேர்த்தது. கோடை சீசனையொட்டி மே மாதம் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ரோஜா கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதை கண்டு ரசிக்க வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் பூங்கா நிரம்பி வழிந்து கூட்டம் அலைமோதும்.
இந்த ஆண்டு 8, 9, 10-ந்தேதிகளில் (அதாவது நேற்று, இன்று நாளை(ஞாயிற்றுக்கிழமை) 17-வது ரோஜா கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால், ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. சீசனையொட்டி பூங்காவில் பல வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. அதை கண்டு ரசிக்க ஆள் இல்லை. அவ்வப்போது பெய்து வரும் மழையால் மலர்கள் உதிர்ந்தும், அழுகியும் வருகிறது.
இதற்கிடையில் ரோஜா பூங்கா தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. இதனால் வெள்ளி விழாவை முன்னிட்டு பூங்காவில் நடத்தப்படும் ரோஜா கண்காட்சிக்காக விசேஷ அலங்காரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் பூங்காவில் 1,500 பூந்தொட்டிகளை கொண்டு ரோஜாப்பூ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அது மேரிகோல்டு, சால்வியா மலர்கள் அடங்கிய பூந்தொட்டிகளால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 25-வது ஆண்டில் ரோஜா பூங்கா என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ரோஜா கண்காட்சி நடத்த முடியவில்லை என்றாலும், 25-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story