பொள்ளாச்சி அருகே, மதுக்கடையை மூடக்கோரி போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்


பொள்ளாச்சி அருகே, மதுக்கடையை மூடக்கோரி போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்
x
தினத்தந்தி 8 May 2020 10:15 PM GMT (Updated: 9 May 2020 3:54 AM GMT)

பொள்ளாச்சி அருகே மதுக்கடையை மூடக்கோரி போலீசாரிடம் கண்ணீர் விட்டு பெண்கள் கதறினர்.

பொள்ளாச்சி,

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி மாலை 6 மணி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையில் நேற்று முன்தினம் முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், பெரும்பாலான இடங்களில் குடும்ப தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில் உள்ள மதுக்கடையை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி செய்தனர். மேலும் உடனடியாக மதுக்கடையை மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதை அறிந்த வடக்கிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் மதுக்கடையால் வீட்டில் தகராறு ஏற்படுவதாக கூறினர். அதற்கு போலீசார், கடையை மூடக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுங்கள், ஊரடங்கு அமலில் இருப்பதால் போராட்டம் நடத்தக்கூடாது என்று தெரிவித்தனர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பெண்கள் கூறியதாவது:-

வழக்கமாக மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருக்கும்போது வீடுகளில் தினமும் தகராறு ஏற்படும். கொரோனா பாதிப்பு, ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் கடந்த 40 நாட்களாக வீடுகளில் நிம்மதியாக இருந்தோம். வீடுகளுக்கு தேவையான பொருட்களை கணவன்மார்கள் வாங்கி தந்தனர். தற்போது வேலைக்கு செல்வதில்லை. வீடுகளில் சேமித்து வைக்கப்படும் பணத்தை எடுத்து வந்து மதுபாட்டிலை வாங்கி வந்து குடிக்கின்றனர். இதனால் மீண்டும் வீடுகளில் தகராறு ஏற்பட தொடங்கி உள்ளது. மேலும் பொழுதுபோக்கிற்காக தாயம் விளையாடுவது வழக்கம். தற்போது கடைகள் திறந்த பிறகு குடித்து விட்டு வந்து பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். எனவே வடக்கிபாளையத்தில் உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story