கர்நாடக மாநிலத்தில் இருந்து கூடலூருக்கு வந்த 17 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு


கர்நாடக மாநிலத்தில் இருந்து கூடலூருக்கு வந்த 17 பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு
x
தினத்தந்தி 9 May 2020 4:00 AM IST (Updated: 9 May 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் இருந்து கூடலூருக்கு வந்த 17 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

கூடலூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பெண் உள்பட 17 பேர் கார்களில் வந்தனர். அவர்களை கக்கநல்லாவில் போலீசார், சுகாதாரத்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வெளியே வர முறைப்படி அனுமதி வாங்கியது தெரியவந்தது. ஆனால் நீலகிரிக்குள் வர மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை. இதனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது வேலைக்காக பெங்களூரு சென்றவர்கள் தங்களது சொந்த ஊரான ஊட்டிக்கு திரும்பி வருவது தெரியவந்தது. இரவு நேரம் ஆகிவிட்டதால் அவர்கள் கூடலூர் தொரப்பள்ளியில் உள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் நேற்று முன்தினம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையிலான குழுவினர், அவர்கள் 17 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்தனர். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் 17 பேரும் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது.

Next Story