திருவண்ணாமலை மாவட்டத்தில், மேலும் 11 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 67-ஆக உயர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை நகர பகுதியில் காலை முதல் மாலை வரை மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் வேகமாகி வரும் நிலையில் மக்கள் அதை பொருட்படுத்தாமல் சாதாரணமாக வெளியே நடமாடுகின்றனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்களால் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் நுழைவு பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, குடியிருப்பு பகுதியில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், தேவையின்றி வாகனங்களில் வருபவர்களை தடுக்கவும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். நேற்று முன்தினம் நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 56 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 10 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்த நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் நேற்று மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அருகே கீழ்கொடுங்காலூரில் 2 பேருக்கும், வெம்பாக்கத்தை அடுத்த வெங்களத்தூரில் 3 பேருக்கும், கீழ்பென்னாத்தூர் அருகே கங்காநந்தல் கிராமத்தில் 2 பேருக்கும், காட்டாம்பூண்டி அருகே மலப்பாம்பாடி கிராமத்தில் ஒருவருக்கும், செங்கம் அருகே அன்வராபாத் கிராமத்தில் ஒருவருக்கும், தெள்ளார் அருகே பெரியகுப்பம் கிராமம் மற்றும் பொன்னூர் கிராமத்தில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67-ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story