ராணிப்பேட்டையில், டிக்-டாக் வீடியோ தகராறில் வாலிபர் அடித்துக் கொலை - 2 பேர் கைது
ராணிப்பேட்டையில் டிக்-டாக் வீடியோ தொடர்பான தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்தவர் போஸ் (வயது 23). இவரும் இவரது நண்பர்கள் சாமு என்ற சாமுவேல், லோகேஷ் என்ற சின்னஅப்பு, தினேஷ் என்ற ராபர்ட், அஜய் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் பேசிக்கொண்டிருந்தனர். இதில் இருதரப்பினரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது டிக்-டாக் வீடியோ தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உதயா, அஜீத், விஜய், வருண்ராஜ் (26), அக்ரம், ஆகாஷ், ராஜசேகர் (24) ஆகிய 7 பேரும் சேர்ந்து அஜய் என்பவரை தாக்கினர். அப்போது போஸ், ஏன் என் நண்பனை தாக்குகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனால் 7 பேரும் சேர்ந்து போஸை கடுமையாக தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த போஸை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர், வருண்ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராஜசேகர், வருண்ராஜ் மற்றும் தேடப்பட்டு வரும் விஜய் ஆகியோர் ஏற்கனவே பொன்னை அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் இருந்தபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story