ஊரடங்கால் 100 நாள் திட்ட வேலை நடக்காததால் ஊராட்சிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் தண்ணீர் இன்றி கருகும் அவலம்


ஊரடங்கால் 100 நாள் திட்ட வேலை நடக்காததால் ஊராட்சிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் தண்ணீர் இன்றி கருகும் அவலம்
x
தினத்தந்தி 9 May 2020 4:33 AM GMT (Updated: 9 May 2020 4:33 AM GMT)

ஊரடங்கால் 100 நாள் திட்ட வேலை நடக்காததால் ஊராட்சிகளில் நடப்பட்ட ஒரு லட்சம் மரக்கன்றுகள் கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கீரமங்கலம், 

ஊரடங்கால் 100 நாள் திட்ட வேலை நடக்காததால் ஊராட்சிகளில் நடப்பட்ட ஒரு லட்சம் மரக்கன்றுகள் கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சாலையோரம் மரக்கன்றுகள்

கஜாபுயலின் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தன. இந்த நிலையில் கிராமங்களில் தன்னார்வ இளைஞர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். இதே போல சாலையோரங்களில் சாய்ந்த மரங்களை மீட்கும் முயற்சியாக மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

அதிலும் திருவரங்குளம் ஒன்றியத்தில் ஆலங்குடி உட்கோட்டத்தில் சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகள் கொரோனா ஊரடங்கு காலத்திலும் சிறப்பு அனுமதியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நல்ல நிலையில் வளர்ந்து வருகிறது. திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் கஜா புயலில் அழிந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த கோகுல கிருஷ்ணன் சொந்த முயற்சியில் கொத்தமங்கலம், உள்ளிட்ட சில கிராமங்களில் மா, பலா, கொய்யா, புளி, வேம்பு, நாவல், உள்ளிட்ட ஒரு லட்சம் பழமரக்கன்றுகளை உருவாக்கி அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கி நட்டு பராமரிக்க செய்தார்.

100 நாள் திட்ட வேலை நடக்காததால்...

சில ஊராட்சிகளில் ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் பழத்தோட்டங்கள் அமைக்கப்பட்டது. மற்ற ஊராட்சிகளில் சாலையோரங்கள், குளக்கரைகள், கோவில் வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு சில மாதங்கள் வரை பராமரிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கன்றுகள் பராமரிப்பு இல்லாமல் கருகி காணாமல் போய்விட்டது. ஒரு லட்சம் மரக்கன்றுகளில் ஒரு சில ஆயிரம் மரக்கன்றுகள் கூட இன்று உயிரோடு இல்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கொரோனா ஊரடங்கால் ஊராட்சிகளில் 100 நாள்திட்ட வேலைகள் நடக்கவில்லை, அதனால் தண்ணீர் ஊற்றி பராமரிக்க முடியவில்லை என்று ஊராட்சி அதிகாரிகள் பதில் கூறுகிறார்கள். ஒரு லட்சம் மரக்கன்றுகளை உருவாக்க ஒரு அதிகாரி எடுத்த நடவடிக்கையை அன்று பாராட்டிய மாவட்ட நிர்வாகம் அந்த மரக்கன்றுகளை நட்ட பிறகு பராமரிக்க தவறியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வியை எழுப்புகிறார் கள் இளைஞர்கள்.

Next Story