பெரம்பலூரில் மைல் கல் மீது கார் மோதல்; மருந்து கடை ஊழியர் படுகாயம் மின்கம்பங்கள் சேதம்


பெரம்பலூரில் மைல் கல் மீது கார் மோதல்; மருந்து கடை ஊழியர் படுகாயம் மின்கம்பங்கள் சேதம்
x
தினத்தந்தி 9 May 2020 6:20 AM GMT (Updated: 9 May 2020 6:20 AM GMT)

கார் அந்தரத்தில் பறந்து சென்று, ஒரே இடத்தில் உள்ள 3 மின்கம்பங்கள் மீது மோதி, தலைக்குப்புற கவிழ்ந்தது.

பெரம்பலூர், 

பெரம்பலூர்-அருமடல் பிரிவு ரோடு, காலனி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் நடராஜன் (வயது 29). இவரது நண்பர் பெரம்பலூர் பெரிய தெற்கு தெருவை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் ராம்குமார்(30). இவர் தனியார் மருந்து கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் நடராஜனும், ராம்குமாரும் மது குடித்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் நடராஜன் தனது காரில் ராம்குமாரை அழைத்துக்கொண்டு பெரம்பலூரில் இருந்து அருமடல் பிரிவு ரோட்டிற்கு சென்றுள்ளார். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் வழியாக நான்கு ரோடு மின்சார வாரிய வட்ட மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த நடராஜனின் கார் சாலையோரம் இருந்த மைல் கல் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சினிமாவில் வரும் காட்சி போல் கார் அந்தரத்தில் பறந்து சென்று, ஒரே இடத்தில் உள்ள 3 மின்கம்பங்கள் மீது மோதி, தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரின் பல பகுதிகள் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த ராம்குமார் உயிருக்கு போராடினார். நடராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நடராஜன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 

இந்த விபத்தில் மின்கம்பங்களில் ஒன்று உடைந்து விழுந்தது. மற்றொரு மின்கம்பம் சாய்ந்தது. மேலும் ஒரு மின்கம்பம் பாதி உடைந்தது. இதில் அருகே உள்ள கடை முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளில் சில சேதமடைந்தன. மின்கம்பங்களின் மீது கார் மோதிய வேகத்தில் அருகே இருந்த மின்மாற்றியில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததில், மின்சாரம் தடைபட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story