அரக்கோணம் நகரில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


அரக்கோணம் நகரில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 9 May 2020 11:51 AM IST (Updated: 9 May 2020 11:51 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அரக்கோணம், 

அரக்கோணம் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை கோயம்பேடு சென்று வந்த மதுரபிள்ளை தெரு, பஜனை கோவில் தெரு, ஜவகர் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 ஆண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. பாதிக்கப்பட்டோர் இருந்த பகுதிக்கு வேறு யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் அரக்கோணம் நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்த தெருக்களை பார்வையிட்டு, தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதால் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் இருப்பவர்களுக்கு தேவையான காய்கறி, மளிகை, பால் உள்பட அத்தியாவசிய பொருள்களை தன்னார்வலர்கள் வாங்கித்தர வேண்டும், 24 மணி நேரமும் இந்த பகுதியில் போலீசார், தன்னார்வலர்கள் கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து சென்னையில் வேலைபார்க்கும் மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து மேல்பாக்கம் பகுதியில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்து, அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள போலீஸ் காரர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் பேபி இந்திரா, தாசில்தார் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜவிஜயகாமராஜ், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story