வந்தவாசி அருகே, ஜெயின் கோவிலில் 2 சாமி சிலைகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வந்தவாசி அருகே, ஜெயின் கோவிலில் 2 சாமி சிலைகள் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 May 2020 11:51 AM IST (Updated: 9 May 2020 11:51 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே ஜெயின் கோவிலில் 2 சாமி சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வந்தவாசி, 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பொன்னூர் மலை அடிவாரம் குந்தகுந்தர் ஐ.டி.ஐ. வளாகத்தில் முனிசுவிரத பகவான் ஜெயின் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை அர்ச்சகர் சாந்தகுமார் கோவிலை பூட்டி விட்டுச் சென்றார்.

நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் பிரதான கேட் உள்பட 3 கிரில் கதவுகள் உடைக்கப்பட்டு கோவில் உள்ளே இருந்த பித்தளை சிலைகள் 6 அங்குலம் உயரம் மற்றும் 7 அங்குலம் உயரம் கொண்ட 2 ஜெயின் சாமி சிலைகளும், 2 பீடம், 2 எந்திர உலோக பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. திருட்டு போன 2 சிலைகளின் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் என கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த பொன்னூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர் சுந்தரராஜன் தடயங்களை பதிவு செய்தார். மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு கோவில் பின்புறம் வரை சென்றது.

மேலும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி கோவிலை பார்வையிட்டு திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கராமன், வந்தவாசி இன்ஸ்பெக்டர் முரளிதரன், பொன்னூர் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Next Story