தா.பழூர் அருகே குடையுடன் திரண்டு டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை


தா.பழூர் அருகே குடையுடன் திரண்டு டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 May 2020 6:49 AM GMT (Updated: 2020-05-09T12:19:33+05:30)

தா.பழூர் அருகே குடையுடன் திரண்டு வந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.

தா.பழூர், 

தா.பழூர் அருகே குடையுடன் திரண்டு வந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் 2 டாஸ்மாக் கடைகளும், கோட்டியால் கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடையும், கோடாலி கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடையும் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் அரசு அறிவித்தபடி நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதில் தா.பழூரில் உள்ள 2 கடைகளை தவிர கோட்டியால் மற்றும் கோடாலி கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த கடைகளில் மது வாங்க கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் அலைமோதியது. 2 கடைகளிலும் சேர்த்து சுமார் 4 ஆயிரம் பேர் மது வாங்க காத்திருந்தனர். போலீசார் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தினர். ஆனால் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மது வாங்கி சென்றனர்.

முற்றுகை

இதைத்தொடர்ந்து கோட்டியால் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கையில் குடையுடன் திரண்டு வந்து, முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் டாஸ்மாக் கடையை திறக்க முடியவில்லை. இருப்பினும் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்ற எண்ணத்தில், மது வாங்க மதுப்பிரியர்கள் அப்பகுதியில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பெண்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ் அங்கு வந்து, பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

காலவரையின்றி மூடல்

அப்போது, டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று பெண்கள் உறுதியாக தெரிவித்தனர். இது பற்றி துணை சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கூறினார். பின்னர் பெண்களிடம் பேசிய அவர், கோட்டியாலில் உள்ள டாஸ்மாக் கடை, ஊரடங்கு முடிந்து சகஜநிலைக்கு திரும்பும் வரை காலவரையின்றி மூடப்படுவதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும், மது வாங்க காத்திருந்த மதுப்பிரியர்களும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோடாலி கிராமத்தில் செயல்பட்ட டாஸ்மாக் கடையும், கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டது.


Next Story