மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2020 7:10 AM GMT (Updated: 9 May 2020 7:10 AM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து பணிகளும் முடங்கின. இதையடுத்து வருங்கால வைப்புநிதிக்கான வட்டி குறைக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பு 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசின் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அரசு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் வட்டக்கிளை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இணை செயலாளர் சுகந்தி, மாவட்ட துணை தலைவர் ராஜ மாணிக்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மேலும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதேபோல் திண்டுக்கல் சப்- கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட இணை செயலாளர் பிச்சைவேல் தலைமையிலும், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் முபாரக்அலி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் மங்களபாண்டியன், செயலாளர் விஜயன், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story