சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மதுபான கடைகளுக்கு குடையுடன் வந்த ‘குடிமகன்கள்’
திண்டுக்கல்லில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மதுபான கடைகளுக்கு குடையுடன் ‘குடிமகன்கள்’ மதுவாங்க வந்தனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. முக கவசம் அணிந்து ஆதார் அட்டையுடன் சென்றவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்பட்டது. மதுக்கடைகள் 43 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதால், குடிமகன்கள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல மதுக்கடைகளில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் போலீசார் தவித்தனர்.
இதனால் ஒருசில இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. எனவே சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மதுக்கடைக்கு வருவோர், கட்டாயம் குடையுடன் வரவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் அறிவித்தார். இதற்கிடையே நேற்று 2-வது நாளாக மதுக்கடைகள் திறந்தன.
அப்போது பல குடிமகன்கள் ஆதார் அட்டை, முக கவசம், குடையுடன் மது வாங்க வந்தனர். அவ்வாறு குடையுடன் வந்தவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது. அதில் சிலர் புத்தம், புதிய குடை, குழந்தைகள் பயன்படுத்தும் குடையுடன் வந்தனர். அதுபற்றி அவர்களிடம் கேட்ட போது, காலையில் தான் புதிதாக குடையை வாங்கியதாக கூறினர். மது மீது உள்ள மோகத்தால் ரூ.100 மதிப்புள்ள குடையை ரூ.180-க்கு வாங்கி வந்ததாக வேதனையுடன் புலம்பினர்.
அதேநேரம் ஒரு சிலர் குடை இல்லாமல் மது வாங்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் குடை விற்பனை செய்யப்படும் கடைகள் திறக்காததால் வாங்க முடியவில்லை என்று போலீசாரிடம் கெஞ்சினர். இதனால் சமூக இடைவெளியை கடைபிடித்து மது வாங்கும்படி குடை இல்லாத நபர்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சமூக இடைவெளியை கடைபிடித்து மதுவை வாங்கி சென்றனர். மேலும் இனிமேல் குடையுடன் தான் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று வெகுவாக கூட்டம் குறைந்ததால் குடிமகன்கள் பல நாட்களுக்கு தேவையான மதுவை மொத்தமாக வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story