மதுபோதையில் ரகளை செய்த வாலிபர்களை தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல் - பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு


மதுபோதையில் ரகளை செய்த வாலிபர்களை தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல் - பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 May 2020 1:21 PM IST (Updated: 9 May 2020 1:21 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே, மதுபோதையில் ரகளை செய்த வாலிபர்களை தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் சாலையில் செல்பவர்களிடம் அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டனர். இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த விவசாயியான செல்லத்துரை என்பவர் அவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது அவருடன் இருவரும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று நண்பர்களை அழைத்து வந்த அவர்கள் செல்லத்துரையை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். படுகாயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் விவசாயியை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை அப்பகுதியில் உள்ள தெருவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெ ரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயியை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story