தேனி மாவட்டத்தில் ‘குடி’மகன்களுக்காக கூடுதல் மதுக்கடைகள் திறப்பு


தேனி மாவட்டத்தில் ‘குடி’மகன்களுக்காக கூடுதல் மதுக்கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 9 May 2020 7:51 AM GMT (Updated: 9 May 2020 7:51 AM GMT)

தேனி மாவட்டத்தில் ‘குடி’மகன்களின் சிரமத்தை போக்க கூடுதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தேனி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், மதுக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து அந்த கடைகளில் ‘குடி’மகன்கள் கூட்டம் அலைமோதியது.

நீண்ட வரிசையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து மதுபானம் வாங்கிச் சென்றனர். சில இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். டொம்புச்சேரியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மதுபிரியர்கள் கூட்டம் அதிகரித்ததால் மதுவிற்பனை பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் நேற்று கூடுதலாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன.நேற்று முன்தினம் 36 மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று கூடுதலாக 8 மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

அதுபோல், குடிமகன்களின் சிரமத்தை போக்கும் வகையில் மதுபான கடைகளில் நேற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. டொம்புச்சேரி மதுக்கடையில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவில் மதுபானம் வாங்கிச் செல்வதற்காக 4 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டு, மதுவிற்பனையில் 4 பேர் வீதம் ஈடுபட்டனர். டோக்கன் வினியோகத்திலும் 4 பேர் ஈடுபட்டனர். 4 வரிசைகளிலும் மதுபானம் வழங்கப்பட்டதால் அதிக நேரம் காத்திருக்காமல் குடிமகன்கள் மதுபானம் வாங்கிச் சென்றனர்.அதேநேரத்தில் 2-வது நாளான நேற்றும் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. கடைகளின் அருகில் தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவை சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் சிலர் விற்பனை செய்தனர். இதை பார்த்த மதுபான பிரியர்கள் மதுபான பாட்டில் களை கடைக்கு அருகிலேயே திறந்து குடிக்கத் தொடங்கினர். கொடுவிலார்பட்டியில் மதுக்கடை அருகில் விவசாய நிலங்களில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து மதுகுடித்ததால் அப்பகுதி திறந்தவெளி மதுபான பாராக மாறியது.

Next Story