கடையநல்லூர் அருகே, கருப்பாநதி அணைப்பகுதியில் பெண் யானை சாவு


கடையநல்லூர் அருகே, கருப்பாநதி அணைப்பகுதியில் பெண் யானை சாவு
x
தினத்தந்தி 9 May 2020 10:15 PM GMT (Updated: 9 May 2020 7:06 PM GMT)

கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைப்பகுதியில் 5 வயது பெண் யானை இறந்தது.

அச்சன்புதூர், 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி கிராமத்துக்கு மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அனுமன் நதி குறுக்கே கருப்பாநதி அணை அமைந்து உள்ளது. இந்த அணைப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக, அப்பகுதியில் வசிக்கும் பணிகர் பழங்குடியின மக்கள் நேற்று காலை கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனச்சரகர் செந்தில்குமார், வனவர்கள் அருமைக்கொடி, லூமிக்ஸ், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், பாத்திமா பிர்தவ்ஸ், பத்மாவதி, கடையநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு 5 வயது உடைய பெண் யானை இறந்து கிடந்தது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் முத்துகிருஷ்ணன், வனஉயிரின மருத்துவர் மனோகரன் ஆகியோருடன் அங்கு விரைந்து வந்தார்.

பின்னர் யானையை பரிசோதனை செய்து, அந்த பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘இனப்பெருக்கத்துக்காக பெண் யானையுடன் இணையும்போது ஆண் யானைகள் சண்டையிட்டு கொள்ளும். அப்படி சண்டையிட்டபோது, தந்தம் குத்தியதில் இந்த யானை இறந்திருக்கலாம்’ என்று தெரிவித்தனர்.

கடையநல்லூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட காடுகளில் கடந்த ஓராண்டில் மட்டும் 3 யானைகள் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story