மாவட்ட செய்திகள்

நாசரேத் அருகே பயங்கரம்: மாமனார்-மருமகன் வெட்டிக்கொலை - 6 பேர் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு + "||" + Terror near Nazareth Father in law The nephew Cut And killed

நாசரேத் அருகே பயங்கரம்: மாமனார்-மருமகன் வெட்டிக்கொலை - 6 பேர் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு

நாசரேத் அருகே பயங்கரம்: மாமனார்-மருமகன் வெட்டிக்கொலை - 6 பேர் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
நாசரேத் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், மாமனார்-மருமகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 6 பேர் கும்பலை பிடிக்க போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாசரேத், 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உடையார்குளம் காந்திநகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 60), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகள் முத்துலட்சுமி மற்றும் ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது.

நாசரேத் அருகே வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தங்க பாண்டியன் மகன் சண்முகசுந்தரம். இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பலவேசம் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து, குடும்ப செலவுக்காக ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் பலவேசம் கடனை திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும், சண்முகசுந்தரம் கூடுதல் பணம் கேட்டு பலவேசத்தை மிரட்டி வந்தாராம். மேலும், அவர் வீட்டு பத்திரத்தையும் பலவேசத்திடம் திருப்பி கொடுக்கவில்லை.

இதுகுறித்து பலவேசம் தன்னுடைய மருமகனான ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தைச் சேர்ந்த தங்கராஜிடம் (26) தெரிவித்தார். இதையடுத்து தங்கராஜ் தன்னுடைய மனைவி முத்துலட்சுமி மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் மாமனாரின் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் பலவேசம், தங்கராஜ் ஆகிய 2 பேரும் நாசரேத் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம், மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சண்முகசுந்தரத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

வீடு புகுந்து...

இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகசுந்தரத்தின் உறவினர்களான வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ், செல்லத்துரை, ஞானசுந்தர், பாரதி, செந்தில், முத்துகுமார் ஆகிய 6 பேரும் இரவில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உடையார்குளம் காந்திநகரில் உள்ள பலவேசத்தின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர்.

அப்போது கதவை திறந்த பலவேசத்திடம், முத்துராஜ் உள்ளிட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த முத்துராஜ் உள்ளிட்ட 6 பேரும் வீடு புகுந்து பலவேசத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற பலவேசத்தின் மருமகன் தங்கராஜையும் அரிவாளால் வெட்டினர்.

இரட்டைக்கொலை

இதில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பலவேசம், தங்கராஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் முத்துராஜ் உள்ளிட்ட 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பலவேசம், தங்கராஜ் ஆகிய 2 பேரும் படுகொலை செய்யப்பட்டதை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டதால் பதற்றம் நிலவியது. இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

உடனே நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரதாபன், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட பலவேசம், தங்கராஜ் ஆகிய 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 தனிப்படை அமைப்பு

கொலையாளிகளை பிடிப்பதற்காக, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சூரியன், ரகு கணேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இரட்டைக்கொலையை தொடர்ந்து உடையார்குளம், வைத்தியலிங்கபுரம் பகுதிகளில் பதற்றம் நிலவுவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.