மாவட்ட செய்திகள்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் திரண்ட வடமாநில தொழிலாளர்கள்: போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர் + "||" + Northern state workers gathered at Tirupur railway station: The police fired a mild beard

திருப்பூர் ரெயில் நிலையத்தில் திரண்ட வடமாநில தொழிலாளர்கள்: போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் திரண்ட வடமாநில தொழிலாளர்கள்: போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்
கோவையில் இருந்து பீகாருக்கு ரெயில் இயக்கப்பட்டதால் அந்த ரெயில் திருப்பூரில் நிற்கும் என்ற நம்பிக்கையில் நேற்று ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் திரண்டனர். அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
திருப்பூர், 

பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வந்தனர். ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் வேலையின்றி தவித்த வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதுபோன்ற வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு கடந்த மாதம் 28-ந் தேதி அறிவித்தது.

ஆனால் இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் ரெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படவில்லை. சொந்த ஊர் செல்ல விரும்பும் தொழிலாளர்கள் தங்கள் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பதிவு செய்துள்ளனர். மேலும் அவரவர் செல்போன் மூலமாகவும் இணையதளம் வழியாக பதிவு செய்து வருகிறார்கள்.

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க காலதாமதம் ஏற்பட்டு வருவதால் வடமாநில தொழிலாளர்கள் மாநகரின் பல பகுதிகளில் திடீரென்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சாலைமறியல் செய்கிறார்கள். இதனால் மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ரெயில் நிலையம் நோக்கி வடமாநில தொழிலாளர்கள் தினமும் வருவது அதிகரித்துள்ளது. ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட் கொடுப்பதாகவும், டோக்கன் வினியோகம் செய்வதாகவும் புரளி கிளம்பியுள்ளது. இதை நம்பி தொழிலாளர்கள் ரெயில் நிலையம் நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவையில் இருந்து பீகார், உத்தரபிரதேசத்துக்கு நேற்று தலா ஒரு ரெயில் இயக்கப்பட்டன. இது பற்றி அறிந்ததும் திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் பலர் அந்த ரெயில்கள் திருப்பூரில் நிற்கும் என்ற நம்பிக்கையில் திரண்டனர். நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். பலர் தண்டவாளத்தில் இறங்கி நின்றனர்.

இது பற்றி அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று தண்டவாளத்தில் நின்றிருந்த வடமாநில தொழிலாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். வடமாநிலத்துக்கு ரெயில் விடப்பட்டால் இது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறி அவர்களை ரெயில் நிலையத்தை விட்டு வெளியேற்றினார்கள். இதை தொடர்ந்து ரெயில் நிலையத்துக்குள் பாதுகாப்பு பணியில் அதிக அளவிலான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் ரெயில் நிலையம் அருகே உள்ள ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் வடமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே திரண்டு நின்றிருந்தனர். அவர்கள் ரெயில் நிலையத்துக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வடமாநில தொழிலாளர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.

இருப்பினும் அந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் திரண்டு நின்றதால் போலீசார் லத்தியால் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு திரண்டு நின்றிருந்த வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்தார். ரெயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன், உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். 


வடமாநிலத்துக்கு திருப்பூரில் இருந்து ரெயில் விடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையான அறிவிப்பு வந்ததும், ஒரு ரெயிலுக்கு அதிகபட்சமாக 1,140 தொழிலாளர்களை ஏற்றி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள். 40 ரெயில்வே போலீசார், வடக்குபோலீசார் உள்பட மொத்தம் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி அந்தந்த பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ரெயில் நிலையம் பகுதியில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.

இதையடுத்து திருப்பூர் மாநகர பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் முக்கிய சந்திப்புகளில் போலீசாரை நிறுத்தி தீவிரமாக கண்காணிக்குமாறு மாநகர கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். இதன்பேரில் துணை கமிஷனர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின்படி நேற்று அவினாசி ரோடு, பி.என்.ரோடு, பல்லடம், ரோடு, காங்கேயம் ரோடு, மங்கலம் ரோடு உள்பட மாநகரின் அனைத்து சாலைகளிலும் உள்ள முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையும் மீறி வந்த ஒரு சில வடமாநில தொழிலாளர்களை போலீசார் எச்சரித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கின
திருப்பூர் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட 27 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கி உள்ளன.
2. திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடியில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தீவிரம்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.1½ கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.