வெங்காய மூட்டைகள் வருகை அதிகரிப்பு: நெல்லை புதிய பஸ்நிலைய மார்க்கெட் முழுவீச்சில் செயல்பட தொடங்கியது


வெங்காய மூட்டைகள் வருகை அதிகரிப்பு: நெல்லை புதிய பஸ்நிலைய மார்க்கெட் முழுவீச்சில் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 9 May 2020 10:45 PM GMT (Updated: 9 May 2020 9:33 PM GMT)

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள மார்க்கெட் முழு வீச்சில் செயல்பட தொடங்கி உள்ளது. அங்கு வெங்காய மூட்டைகள் அதிகளவு கொண்டு வரப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாநகரில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. அதற்கு பதிலாக பல்வேறு இடங்களில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா வேகமாக பரவியது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள மற்ற பெரிய மார்க்கெட்டுகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டை மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அங்கிருந்த சில்லறை காய்கறி கடைகள் சாப்டர் பள்ளி மைதானத்துக்கு ஏற்கனவே மாற்றப்பட்டு இருந்தது. மீதமிருந்த 30 மொத்த கடைகள் மட்டும் செயல்பட்டு வந்தன. அந்த கடைகளை நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு மாற்ற மாநகராட்சி உத்தரவிட்டது. அதே நேரத்தில் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் வளாகத்துக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் நெல்லை புதிய பஸ்நிலையத்துக்கு மொத்த காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது. அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் மொத்தமாக கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டது. முழுவீச்சில் அங்கு காய்கறி மார்க்கெட் செயல்பட தொடங்கி உள்ளது.

நேற்று மார்க்கெட் விடுமுறை என்றாலும் பகலில் காய்கறி லோடுகள் வந்து கொண்டிருந்தன. குறிப்பாக பல்லாரி, சின்ன வெங்காயம் மூட்டைகள் ஏராளமான லாரிகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டன. மராட்டிய மாநிலம் புனே பகுதியில் இருந்தும், நயினார்குளம் மார்க்கெட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பல்லாரிகளும் கொண்டு வரப்பட்டன.

இதுதவிர வடமாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கும் அதிகளவு கொண்டு வரப்பட்டது. அவை பஸ் நிலைய வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நயினார்குளம் மார்க்கெட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பீட்ரூட், முட்டைகோஸ் ஆகியவை அழுகி விட்டன. அவற்றை வியாபாரிகள் வெளியே எடுத்து கொட்டினார்கள்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “புதிய பஸ் நிலையத்தில் பணம், காய்கறி மூட்டைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இரவு நேரத்தில் முழுமையான மின்விளக்கு வசதியும் இல்லை. எனவே அங்கு கூடுதல் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். மின்னணு தராசுகளுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கு தேவையான மின்சார பிளக் வசதியையும் அமைத்து தர வேண்டும்“ என்றனர்.


Next Story