கூடுவாஞ்சேரியில் மாமியார், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி


கூடுவாஞ்சேரியில் மாமியார், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 May 2020 3:45 AM IST (Updated: 10 May 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரியில் மாமியார், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 184 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் புதிதாக 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதன்படி செங்கல்பட்டு, சோத்துப்பாக்கத்தில் தலா 6 பேர், ஏகாட்டூரில் 4 பேர், பொத்தேரி, பெரும்பாக்கத்தில் 3 பேர், தையூர், கூடலூர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், தாம்பரம் பகுதிகளில் தலா 2 பேர், சித்தாமூர், சிட்லபாக்கம், விட்லபுரம், பல்லாவரம், கொளப்பாக்கம், பழைய பெருங்களத்தூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 224 ஆனது. நேற்று பாதிப்புக்குள்ளான 40 பேரில் 30 பேர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் ஆவர்.

கூடுவாஞ்சேரியில் பாதிக்கப்பட்ட 2 பேர் மாமியார், மருமகள் ஆவர். கூடுவாஞ்சேரி பாரதியார் தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 30 வயது காய்கறி வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் அவரது வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று 50 வயதான பெண்ணுக்கும், 26 வயதான அவரது மருமகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

காய்கறி வியாபாரிகள்

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 670 காய்கறி வியாபாரிகள் அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர், அச்சரப்பாக்கம் பகுதிகளை சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 550 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 150 பேரின் பரிசோதனை முடிவு வெளியானது. அதில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மேலும் அதிகரிக்க வாய்ப்பு

இன்னும் மீதம் உள்ள 400 பேரின் சோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகளால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அடையாளப்படுத்தப்பட்டு உள்ள காய்கறி வியாபாரிகள், 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

170 பேர் தனிமை

சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் 170 காய்கறி வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு பல்லாவரம், அனகாபுத்தூர், பொழிச்சலூர் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தனிமைப்படுத்தி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உணவுகள் காலதாமதமாக வழங்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். அனகாபுத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள வியாபாரிகள் இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் இவ்வாறு திருமண மண்டபங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு காலதாமதமின்றி உணவு வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு சத்தான உணவு பொருட்கள், முட்டை, சுண்டல் வழங்கவும், அசைவ உணவைத்தவிர அவர்கள் கேட்கும் அனைத்து உணவுகளும் வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story