விருத்தாசலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்


விருத்தாசலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 9 May 2020 9:59 PM GMT (Updated: 9 May 2020 9:59 PM GMT)

விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்.

விருத்தாசலம்,

விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி ஆகிய இடங்களில் கொரோனா பாதித்த பகுதிகளை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். அப்போது கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறுகையில், நம் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேப்பூர், திட்டக்குடி மற்றும் பண்ருட்டி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அச்சம் கொள்ள தேவையில்லை

அப்பகுதிகளில் கிராமங்கள்தோறும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாலுகாவுக்கும் 2 சப்-கலெக்டர்கள் கண்காணிப்பு பணியில் உள்ளனர். கொரோனாவில் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய பகுதிகளில் 90 சதவீதம் பேர் உள்ளனர். மேலும் பொதுமக்கள் கொரோனா பரவல் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை.

அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அவற்றை கண்காணிக்கும் வகையில் தற்போது சப்-கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கொரோனா குறித்த உதவிகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணிலும், சப்-கலெக்டர் அலுவலக சிறு கட்டுப்பாட்டு அறையை 04143 260248 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கொள்ளலாம். பொதுமக்கள் வெளியில் வரும்போது முககவசம் அணிந்து கொண்டு வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதை மட்டும் செய்தால் போதும். கொரோனாவை விரட்டி அடித்து விடலாம் என தெரிவித்தார். அப்போது விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் கவியரசு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story