2 நாட்களில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை: ஐகோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு


2 நாட்களில் ரூ.10½ கோடிக்கு மது விற்பனை: ஐகோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 9 May 2020 10:18 PM GMT (Updated: 2020-05-10T03:48:07+05:30)

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் ரூ.10½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த கடைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுபானங்கள் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திக்குமுக்காடினர். பல இடங்களில் மதுபானத்திற்கு பதிலாக போதை ஏறும் என்ற எண்ணத்தில் கிருமி நாசினி திரவத்தை குடித்தவர்களும், அதனால் இறந்தவர்களும் உண்டு.

இந்நிலையில் அரசு உத்தரவின்படி 43 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுபானம் வாங்க வருபவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.

ரூ.10½ கோடிக்கு விற்பனை

ஊரடங்கினால் மதுபானம் அருந்த முடியாமல் தவித்து வந்த மதுப்பிரியர்கள், 1½ மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறந்ததும் திருவிழா கூட்டம்போல் மதுக்கடைகளுக்கு படையெடுத்துச்சென்றனர். டாஸ்மாக் கடைகளை சுற்றிலும் திரும்பிய திசையெங்கும் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை பொறுத்தவரை மொத்தமுள்ள 226 டாஸ்மாக் கடைகளில் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் உள்ள 150 கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது. இதன் மூலம் முதல் நாளான 7-ந் தேதியன்று ரூ.5 கோடியே 75 லட்சத்து 12 ஆயிரத்து 610-க்கும், நேற்று முன்தினம் ரூ.4 கோடியே 83 லட்சத்து 59 ஆயிரத்து 260-க்கும் ஆக மொத்தம் 2 நாட்களில் ரூ.10 கோடியே 58 லட்சத்து 71 ஆயிரத்து 870-க்கு மதுபானங்கள் விற்பனையாயின.

மீண்டும் மூடப்பட்டன

இந்நிலையில் தமிழகம் முழுவதுமே பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் அரசு விதித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்படாததால் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்கள் திறக்கப்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று முதல் மீண்டும் மூடப்பட்டன. அந்த வகையில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 150 டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முன்தினம் மாலை மது விற்பனை முடிந்ததும் இரவில் கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர். ஒரு சில கடைகள் சீல் வைக்கப்படாத நிலையில் நேற்று அந்த கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மேலும் ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் மதுபானங்களை, கடைகளில் இருந்து குடோனுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைப்பது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்திடம் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. இதனால் மதுபானங்கள், அந்தந்த டாஸ்மாக் கடைகளிலேயே இருப்பதால் அவை திருட்டு போகக்கூடும் என்பதால் அதனை தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் 2 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கடையின் விற்பனையாளர் ஒருவரும் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார்.

கடந்த 2 நாட்களாக மதுக்கடைகளில் திருவிழா கூட்டம்போன்று மதுப்பிரியர்கள் அலைமோதிய நிலையில் நேற்று முதல் கடைகள் திறக்கப்படாததால் அப்பகுதி ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

Next Story