12½ லட்சம் ஏக்கர் பாசனத்துக்காக டெல்டாவில், ரூ.64 கோடியில் தூர்வாரும் பணிகள்


12½ லட்சம் ஏக்கர் பாசனத்துக்காக டெல்டாவில், ரூ.64 கோடியில் தூர்வாரும் பணிகள்
x
தினத்தந்தி 10 May 2020 4:02 AM IST (Updated: 10 May 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா பகுதியில் ரூ.64 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 12½ லட்சம் ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூர்,

டெல்டா பகுதியில் ரூ.64 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 12½ லட்சம் ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இந்த மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.

இதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். குறுவை பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும்.

இந்த தண்ணீர் கரூர், திருச்சி மாவட்டம் வழியாக தஞ்சை மாவட்ட எல்லையான கல்லணையை வந்தடையும். அங்கிருந்து தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பிரித்து விடப்படும். இந்த மாவட்டங்களில் 12½ லட்சம் ஏக்கர் வரை பாசன வசதி பெறும்.

தூர்வாரும் பணிகள்

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னதாக தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஊரடங்கு காரணமாக கட்டுமான பணிகள் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதியில் நிறுத்தப்பட்ட பல்வேறு குடிமராமத்து பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் 529 ஏ பிரிவு, 2,084 பி பிரிவு, 1,980 சி பிரிவு, 780 டி பிரிவு, 182 இ பிரிவு வாய்க்கால்களும், திருவாரூர் மாவட்டத்தில் 572 ஏ பிரிவு, 3,141 பி பிரிவு, 3,826 சி பிரிவு, 1,957 டி பிரிவு, 502 இ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன. நாகை மாவட்டத்தில் 598 ஏ பிரிவு, 2,694 பி பிரிவு, 3,542 சி பிரிவு, 3,170 டி பிரிவு, 457 இ பிரிவு வாய்க்கால்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 ஏ பிரிவு, 24 பி பிரிவு வாய்க்கால்களும் உள்ளன.

12-ந் தேதி டெண்டர்

இந்த பாசன வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி கொண்டு செல்லும் வகையில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ரூ.64 கோடியில் 355 பணிகள் தூர்வாருவதற்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இதற்கான டெண்டர் வருகிற 12-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) விடப்படுகிறது. டெண்டர் விடப்பட்டால் இந்த வார இறுதிக்குள் தூர்வாருவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காணிப்பு பொறியாளர்

இது குறித்து கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் கூறுகையில், “டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட குடிமராமத்து பணிகளில் மீதமிருந்த பணிகள் தற்போது தொடங்கப்பட்டு அதுவும் முடிவடையும் தருவாயில் உள்ளது. டெல்டா பாசனத்துக்காக தூர்வாரும் பணிகளுக்கு வருகிற 12-ந் தேதி டெண்டர் விடப்படுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் ரூ.22 கோடியே 91 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் 165 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திருவாரூர் மாவடடத்தில் ரூ.22 கோடியே 56 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் 106 பணிகளும், நாகை மாவட்டத்தில் ரூ.16 கோடியே 71 லட்சம் மதிப்பில் 80 பணிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பில் 4 பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்குள் பணிகள் விரைந்து முடிக்கப்படும்” என்றார்.

Next Story