தஞ்சை மாவட்டத்தில், இன்று முழுஊரடங்கு கிடையாது கலெக்டர் கோவிந்தராவ் தகவல்


தஞ்சை மாவட்டத்தில், இன்று முழுஊரடங்கு கிடையாது கலெக்டர் கோவிந்தராவ் தகவல்
x

தஞ்சை மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கிடையாது என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கிடையாது என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

முழு ஊரடங்கு கிடையாது

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோயால் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 28 நாட்களுக்கு புதிதாக எந்தவொரு நோய்த்தொற்றும் கண்டறியப்படாவிட்டால், அப்பகுதிகளை தடைசெய்யப்பட்ட பகுதிக்கான நிபந்தனைகளில் இருந்து தளர்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கிடையாது. அரசின் தளர்வுகளின்படி, ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

முக கவசம் கட்டாயம்

அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியே வரும்போது, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வண்ண அடையாள அனுமதி அட்டையை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது.

பொது இடங்களில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணியாதவர்களுக்கு கடைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் பரிசீலிக்கலாம்.

அபராதம் விதிக்கப்படும்

இருசக்கர வாகனங்களில் ஒரு நபரும், நான்கு சக்கர வாகனங்களில் இரண்டு நபர்களும் மட்டுமே செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடை பிடிக்காத கடைகள் மீது அபராதம் விதிக்கப்படும். சோதனை சாவடி வழியாக தஞ்சை மாவட்டத்திற்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கையில் முத்திரை வைத்து, மஞ்சள் அடையாள வில்லை ஒட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) சக்திவேல், பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாஸ்டன் புஷ்ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story