தாசில்தார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: 13-ந்தேதி கடைகள் திறக்க அனுமதி வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்


தாசில்தார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: 13-ந்தேதி கடைகள் திறக்க அனுமதி வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்
x
தினத்தந்தி 10 May 2020 5:18 AM IST (Updated: 10 May 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் 32 பேர் பாதிக்கப்பட்டனர்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் 32 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் திருவாரூர் வண்டிகார தெரு, ஐந்நூற்று பிள்ளையார் கோவில் தெரு ஆகிய 2 இடங்களில் 2 பேர் நோய் தொற்றில் பாதிக்கப்பட்டனர். இந்த 2 இடங்களுக்கு இடையில் கடைவீதி அமைந்துள்ளது. இதனால் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடைவீதி கடந்த மாதம் 17-ந்தேதி அடைக்கப்பட்டது. கடந்த வாரம் பாதிக்கப்பட்ட 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். 

இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள், ஹார்டுவேர், மின் சாதனம் போன்ற கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதில் பெரும்பாலான கடைகள் திருவாரூர் கடைவீதியில் தான் அமைந்துள்ளது. கடைவீதி தடை செய்யப்பட்ட பகுதியாக நீடிப்பதால் கடைகள் திறக்க முடியாத நிலையில் இருந்து வந்தது. 

இந்தநிலையில் கடை வீதி பகுதியில் உள்ள வங்கிகள் மட்டும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் வர்த்தகர்கள் கடையை திறக்க அனுமதிக்கக்கோரி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அப்போது வர்த்தக சங்க நிர்வாகிகளை அழைத்து தாசில்தார் நக்கீரன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதில் தடை செய்யப்பட்ட பகுதியில் விலக்கு அளிக்கப்பட்டு வருகிற 13-ந்தேதி கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். முன்னதாக கடைவீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story