குமரி மாவட்டத்தில் அரசு அறிவித்த கூடுதல் அரிசியை முழுமையாக வழங்க வேண்டும் கலெக்டரை சந்தித்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
குமரி மாவட்டத்தில் அரசு அறிவித்த கூடுதல் அரிசியை முழுமையாக வழங்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து வசந்தகுமார் எம்.பி. மற்றும் 6 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக கோரிக்கை வைத்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் அரசு அறிவித்த கூடுதல் அரிசியை முழுமையாக வழங்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து வசந்தகுமார் எம்.பி. மற்றும் 6 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை மனு
வசந்தகுமார் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு கூட்டாக வந்தனர். பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆர்.சி.சி. பிராந்திய புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு செல்ல ஏற்படும் இடையூறுகளை நீக்கும் வகையில் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்.
கூடுதல் அரிசி
ரேஷன் கடைகளில் அரசு அறிவித்துள்ள சிறப்பு திட்டத்தின் கீழ் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க வேண்டும். ஆனால் குமரி மாவட்டத்தில் பல ரேஷன் கடைகளில் சாதாரணமாக வழங்கக்கூடிய அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. சில கடைகளில் இந்த மாதத்துக்கான கூடுதல் அரிசி மட்டும் வழங்குகிறார்கள். ஏப்ரல் மாதத்துக்கான அரிசி வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பு திட்ட அரிசி ஒரே சீராக கிடைக்கவில்லை. எனவே சிறப்பு கவனம் செலுத்தி அனைத்து மக்களுக்கும் அரசு அறிவித்த கூடுதல் அரிசியை முழுமையாக வழங்க வேண்டும்.
சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அவசர தேவைக்காக வரும் குமரி மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு உரிய அனுமதி சீட்டு காலதாமதமின்றி வழங்க வேண்டும். அப்படி வருபவர்களுக்கு முறையான பரிசோதனை மேற்கொண்ட பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு இழப்பீடு
வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அலைக்கழிக்கப்படாமல் இருப்பதற்காக ஆரல்வாய்மொழி மற்றும் களியக்காவிளை ஆகிய சோதனை சாவடிகளில் தகவல் உதவி மையம் அமைக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றினால் ஏராளமான இடங்களில் வாழைகள் சேதமடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குதல் அவசியம். குமரி மாவட்ட மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story