வியாபாரிக்கு கொரோனா: விரிகோடு பகுதியில் 2-வது நாளாக சுகாதார அதிகாரிகள் ஆய்வு


வியாபாரிக்கு கொரோனா: விரிகோடு பகுதியில் 2-வது நாளாக சுகாதார அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 10 May 2020 6:33 AM IST (Updated: 10 May 2020 6:33 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம், விரிகோட்டில் வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விரிகோடு பகுதியில் 2-வது நாளாக சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குழித்துறை, 

மார்த்தாண்டம், விரிகோட்டில் வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விரிகோடு பகுதியில் 2-வது நாளாக சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சாலைகளை மூடி போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிக்கு கொரோனா

மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் மார்த்தாண்டம் மார்க்கெட் சாலையில் கடை நடத்தி வந்தார். அவர், தஞ்சாவூரில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்று விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சளி, மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. 3 நாட்களுக்கு பின்பு வந்த பரிசோதனை முடிவில் வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுகாதார துறையினர் வியாபாரியை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், வியாபாரியின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். நேற்று முன்தினம் உண்ணாமலைக்கடை பேரூராட்சி செயல் அலுவலர் பிரதாபன், விளவங்கோடு தாசில்தார் ராஜமனோகரன் மற்றும் சுகாதார அதிகாரிகள் விரிகோடு பகுதிக்கு சென்று கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் தூவுதல் போன்ற பணிகள் மேற்கொண்டனர். சில இடங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

2-வது நாளாக

விரிகோடு பகுதியில் நேற்று 2-வது நாளாக சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு செய்தனர். குறிப்பாக வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளதாக என கணக்கெடுத்தனர். மேலும், அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. விரிகோடு பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

குறிப்பாக மார்த்தாண்டம்- கருங்கல் சாலையில் விரிகோடு ஜங்சன், விரிகோடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் இருந்து மாமூட்டுக்கடை செல்லும் சாலை, சானல்கரை பகுதி, காரவிளை சி.எஸ்.ஐ. ஆலயம் செல்லும் சாலை போன்ற சாலைகள் கம்புகளால் முற்றிலுமாக மூடி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர். மார்த்தாண்டம் போலீசார், சுகாதார அதிகாரிகள் முகாமிட்டு வெளி ஆட்கள் யாரும் உள்ளே நுழையாதபடியும், உள்ளே உள்ள நபர்கள் வெளியே செல்ல முடியாதபடியும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

எப்படி தொற்றியது?

கொரோனா தொற்று ஏற்பட்ட வியாபாரி சில நாட்கள் தஞ்சாவூரில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். அவரது மகள் நர்சாக வேலை பார்த்து வருவதால் அவருக்கு கொரோனா இருந்திருக்கலாம் என்றும், அவர் மூலம் வியாபாரிக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. ஆனால், வியாபாரியின் மகளுக்கு பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இதனால், வியாபாரிக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story