ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் பெண் சடலத்துடன் வந்த ஆம்புலன்ஸ் நிற்காமல் சென்றதால் பரபரப்பு


ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் பெண் சடலத்துடன் வந்த ஆம்புலன்ஸ் நிற்காமல் சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 May 2020 7:02 AM IST (Updated: 10 May 2020 7:02 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் பெண் சடலத்துடன் வந்த ஆம்புலன்ஸ் நிற்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரல்வாய்மொழி, 

ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் பெண் சடலத்துடன் வந்த ஆம்புலன்ஸ் நிற்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சடலத்துடன் வந்த ஆம்புலன்ஸ்

சென்னை மற்றும் வெளியூரில் இருந்து தினமும் ஏராளமானோர் குமரி மாவட்டத்திற்கு வருகிறார்கள். அந்த நபர்கள் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, பரிசோதனைக்கு பிறகு முகாமில் சென்று தங்க வைக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஆம்புலன்ஸ் ஒன்று சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் நாகர்கோவில் பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இந்த ஆம்புலன்ஸ் நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பகுதியை சென்றடைந்த போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அனுமதி சீட்டு வைத்திருப்பதாக டிரைவர் கூறியுள்ளார். எந்த சீட்டு வைத்திருந்தாலும், சோதனைச்சாவடியில் பதிவு செய்து விட்டு தான் செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

பரபரப்பு

பின்னர் மீண்டும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிக்கு ஆம்புலன்ஸ் கொண்டு செல்லப்பட்டது. அந்த ஆம்புலன்சில் மூதாட்டி சடலம் இருந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், குமரி மாவட்டம் காப்பிக்காடு பகுதியை சேர்ந்த சஜிதா (வயது 70) என்பவர் சென்னை மாதவரம் பகுதியில் தங்கியிருந்த போது மரணமடைந்தார். சொந்த ஊரில் அவரது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து சஜிதாவின் சடலத்துடன் அவர்கள் கிளம்பினர். ஆம்புலன்சில் சஜிதாவின் சடலம் ஏற்றப்பட்டது. அதில், அவரது மகன் ராஜாஜி, மனைவி ஜெபகனி, தங்கை ஏஞ்சல் ஆகியோரும், அதனை தொடர்ந்து காரில் மற்றொரு மகன் ராஜதுரை, அவரது மனைவி டெல்பின் மற்றும் 4 குழந்தைகள் இருந்தனர். இதனையடுத்து போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவரை எச்சரித்தனர். பின்னர், கொரோனா பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்லும்படி உத்தரவிட்டனர். இந்த பரிசோதனை முடிந்த பிறகு, அவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சடலத்துடன் வந்த ஆம்புலன்ஸ், ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story