ஊட்டியில், சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைகளுக்கு பசுமை வரி விதிப்பு - வியாபாரிகள் அதிர்ச்சி


ஊட்டியில், சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைகளுக்கு பசுமை வரி விதிப்பு - வியாபாரிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 10 May 2020 4:00 AM IST (Updated: 10 May 2020 8:08 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைகளுக்கு பசுமை வரி விதிப்பதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

ஊட்டி,

கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநில போக்குவரத்து கொண்டதாக நீலகிரி மாவட்டம் விளங்கி வருகிறது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்ததால், காற்று மாசு அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நீலகிரியில் பதிவு செய்யப்படாமல் வெளியிடங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு சோதனைச்சாவடிகளில் பசுமை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

பர்லியார் சோதனைச்சாவடியில் வாகனங்களை நிறுத்தி பசுமை வரி வசூலிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கோவை மாவட்டம் கல்லாரில் வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளதால், வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்கள் நீலகிரிக்கு வருவது மிகவும் குறைவு.

இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள சில கடைகளில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாததாக கூறி பசுமை வரி ரூ.500 விதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஊட்டி ஏ.டி.சி. காந்தி விளையாட்டு மைதானத்தில் உழவர் சந்தை தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் 50-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே நேற்று மதியம் கடைகளுக்கு வந்த ஒரு நபர் மக்கள் கூட்டமாக நிற்பதாகவும், சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாததாகவும் கூறி பசுமை வரி விதித்து, ரூ.500 வசூலித்தார். அதற்கான ரசீது வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டது. அதை பார்த்த வியாபாரிகள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். அதில், பிளாஸ்டிக் இல்லா நீலகிரி மாவட்டம், கல்லார் சோதனைச்சாவடி பசுமை வரி என்று குறிப்பிடப்பட்டு இருந்ததுடன், தேதி, நேரம், அபராத தொகை இடம் பெற்று இருந்தது. பசுமை வரி சோதனைச்சாவடிகளில் வசூலிக்க வேண்டும். அதை விடுத்து வியாபாரிகளிடம் வசூலித்ததால் சர்ச்சை எழுந்து உள்ளது. ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி ஒருவர் இதுபோன்று அபராதம் விதித்து வருவது குறித்து வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ரசீதை காண்பித்து தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

சோதனைச்சாவடிகளில் பஸ், லாரிக்கு ரூ.90, சரக்கு வாகனம் ரூ.60, வாடகை கார் ரூ.30, சொந்த வாகனம் ரூ.25, ஆட்டோ ரூ.15, இருசக்கர வாகனம் ரூ.10 என பசுமை வரி வசூலிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பிறமாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் நீலகிரிக்கு வருவது இல்லை. இதனால் பசுமை வரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஊட்டி உழவர் சந்தையில் கடை வைத்து உள்ள எங்களிடம் கடைகளில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்று கூறி ஒருவர் பசுமை வரி விதித்து, ரூ.500 வசூலித்து சென்றார். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story