மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட முயற்சி - தப்பிஓடிய வாலிபருக்கு வலைவீச்சு


மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட முயற்சி - தப்பிஓடிய வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 May 2020 10:45 PM GMT (Updated: 10 May 2020 2:38 AM GMT)

கோவையில் டாஸ்மாக் மதுக்கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி மதுபாட்டில்களை திருட முயன்ற வாலிபரை போலீசாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 43 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக்கடைகள் கடந்த 7-ந்தேதி திறக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று காலை கோவையில் மதுபான கடைகள் எதும் திறக்கப்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இதனால் மதுப் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தநிலையில் கோவை செல்வபுரம் சாலை செட்டி வீதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையின் மேற்கூரையின் ஓடுகளை பிரித்து வாலிபர் ஒருவர் உள்ளே இறங்கினார். இதனை அந்த வழியாக நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து பெரியக்கடை வீதி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து மதுபானக் கடைக்குள் இறங்க முயன்ற வாலிபர் கீழே குதித்து தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் வந்த போலீசார் டாஸ்மாக் கடையில் உள்ளே சென்று பார்த்தபோது மது பாட்டில்கள் ஏதும் திருடப்படவில்லை என தெரியவந்தது. மேலும் மது பாட்டில்கள் திருட வந்த வாலிபர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் போலீசார் தப்பி ஓடிய வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story