ஊரடங்கினால் தொழில் முடக்கம்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சலவை தொழிலாளர்கள்


ஊரடங்கினால் தொழில் முடக்கம்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சலவை தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 10 May 2020 4:00 AM IST (Updated: 10 May 2020 9:35 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் சலவை தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூரில் 250-க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் தள்ளு வண்டியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று துணிகளை தேய்த்து கொடுத்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து பல்வேறு தொழில்களும் முடங்கிய நிலையில் அந்த வரிசையில் சலவை தொழிலும் முடங்கியது.

இந்த சலவை தொழிலாளர்கள் அன்றாடம் கிடைக்கும் துணிகளை தேய்த்து அதில் வரும் வருமானத்தை வைத்து தங்களது குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கால் தொழில் முடக்கம் ஏற்பட்டது இவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது.

கடந்த 1½ மாதங்களாக தொழில் செய்ய முடியாமல் தள்ளு வண்டிகளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளனர். இதனை பராமரிக்கவும் முடியாத நிலையில் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சலவை தொழிலாளர் கருப்பையா கூறும்போது, அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வந்த நிலையில் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். எனவே சலவை தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வாழ்வாதாரம் மேம்பட உதவி செய்ய வேண்டும் என்றார்.

Next Story