ஓமலூர் அருகே புதுமாப்பிள்ளை கொலையில் 12 பேர் கைது


ஓமலூர் அருகே புதுமாப்பிள்ளை கொலையில் 12 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2020 9:51 AM IST (Updated: 10 May 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்,

ஓமலூர் அருகே பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். அப்போது புதுக்கடை காலனி பகுதியில் அவர்கள் சென்ற போது, அங்குள்ள வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கினர். இதனால் அவர்களுக்கும், அங்கிருந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு சிறிது நேரத்தில் இருதரப்பினர் இடையே மோதலாக வெடித்தது.

அதாவது பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர்களும், புதுக்கடை காலனி பகுதியை சேர்ந்தவர்களும் மோதிக்கொண்டனர். இதில் புதுக்கடை காலனியை சேர்ந்த புதுமாப்பிள்ளையான விஷ்ணுபிரியன் (வயது 28), அவரது தம்பி நவீன் (26) ஆகியோரை சிலர் உருட்டுக்கட்டையால் அடித்ததுடன், கத்தியாலும் குத்தினார்கள். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே தாக்கியவர்கள் தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணுபிரியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை மறியல்

இதை கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்யக்கோரியும் புதுக்கடை காலனி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதுடன், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

12 பேர் கைது

இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக நேற்று சர்க்கரைசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (44), பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (42), சண்முகம் (32), ஹரிவாசன் (18), கார்த்திக் (25), ராமகிருஷ்ணன் (34), தமிழ்மணி (22), அருண்குமார் (23), தங்கராஜ் (24), கோபால் (21), நவீன் குமார் (20), பிரசாந்த் (21) ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story