கரூர் அருகே ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது பழிக்குப் பழியாக கொன்றதாக வாக்குமூலம்


கரூர் அருகே ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது பழிக்குப் பழியாக கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 10 May 2020 10:04 AM IST (Updated: 10 May 2020 10:04 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நச்சலூர், 

கரூர் அருகே ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பழிக்குப் பழியாக கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வெட்டிக்கொலை

கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சி தெற்கு மாடுவிழுந்தான்பாறையை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). நச்சலூரில் சொந்தமாக ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வந்த இவர், கடந்த 7-ந்தேதி இரவு ரத்த பரிசோதனை நிலையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நச்சலூர் சொட்டல் பகுதியில் உள்ள கரும்புக்காடு அருகே அவர் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சரவணனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே ஊரை சேர்ந்த பரமசிவம் மகன் முருகானந்தம் (33), மற்றும் அவரது உறவினரான ராஜாமணி மகன் செல்லமுத்து (29) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

2 வாலிபர்கள் கைது

விசாரணையில், கடந்த மாதம் 21-ந்தேதி நச்சலூரில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பால் வியாபாரி அன்பழகனின் கொலையில் சரவணனுக்கு தொடர்பு இருந்ததும், அதற்கு பழிக்குப் பழியாக சரவணனை கொலை செய்ததாக அன்பழகனின் உறவினர்களான முருகானந்தமும், செல்லமுத்துவும் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Next Story