பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மேலும் 47 பேருக்கு கொரோனா


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மேலும் 47 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 May 2020 11:21 AM IST (Updated: 10 May 2020 11:21 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குன்னம், 

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் 31 பேர்

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த மொத்தம் 73 பேரில், 9 பேர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் அரியலூர் மாவட்ட எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆனது. அதில் 5 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு:-

வேப்பூரை சேர்ந்த 2 பேர், காடூரை சேர்ந்த 13 பேர், புதுவேட்டக்குடியை சேர்ந்த 4 பேர், நல்லறிக்கை, நமையூர், கிழுமத்தூர், கொத்தவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், வரகூரை சேர்ந்த 2 பேர், பெண்ணகோணத்தை சேர்ந்த 6 பேர்.

அரியலூரில் 16 பேர்

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 255 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 6 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று மட்டும் அரியலூர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 16 பேரின் விவரம் வருமாறு:-

அரியலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளூர், அம்பாபூர், முனியங்குறிச்சி, பெரிய திருக்கோணம், கடுகூர், அயன் ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும், திருமானூர் தாலுகாவில் கீழகொளத்தூரில் ஒருவரும், செந்துறை தாலுகாவில் மருவத்தூரில் ஒருவரும், தா.பழூர் தாலுகாவில் தா.பழூர், காரைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும், சிந்தாமணியில் 2 பேரும், ஜெயங்கொண்டம் தாலுகாவில் கழுமங்கலத்தில் 2 பேரும், உடையார்பாளையம், வானத்திரயான்பட்டினம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 47 பேரும், ஏற்கனவே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story